அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
இந்தியாவின் சென்னை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்அயனாவரம் காசி விசுவநாதர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள சிவன் கோயிலைக்குறிக்கும். இந்த கோவில் மெட்ராசு மாகாணத்தின் குசராத்தி சமூகத்தின் டக்கர் குலத்தால் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் கட்டப்பட்டது. மேடவாக்கம் தண்ணீர் தொட்டி சாலைக்கு அருகிலும் அயனாவரம் பேருந்து நிலையத்தை ஒட்டியும் அயனாவரம் காசி விசுவநாதர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் நீதியரசர் இ. பத்மநாபன் கமிட்டியால் பட்டியலிடப்பட்ட 400 பாரம்பரிய கட்டமைப்புகள் மற்றும் கோவில்களுள் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13.0980°N 80.2412°E ஆகும். அயனாவரம் பகுதியிலுள்ள காசி விசுவநாதர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.



